கலைஞரே இத்தோட நிறுத்திக்கோங்க, பிளீஸ்!!
ஆரம்ப காலங்களில் பதிவுகளில் கலைஞரை கேலி செய்தே அதிக பதிவுகள் எதுதினேன்; சில காலங்களின் பின்னர் அது வேண்டாமென்று தோன்றியதால் நீண்ட நாட்களாக கலைஞர் பற்றி எதுவும் எழுதவில்லை. ஒருவரை திட்டிக்கொண்டே இருப்பதால் என்ன வந்துவிடப் போகின்றது என்கின்ற எண்ணம்தான் அதற்கு காரணமன்றி கலைஞர் மீதான எனது எண்ணங்களின் மாற்றமல்ல!! பொதுவாக இலங்கைத் தமிழர்களுக்கு கலைஞர்மீது வெறுப்பும், கோபமும் ஏற்ப்பட காரணம்; அவர் இறுதிநேர யுத்தத்தை நிறுத்தி அப்பாவி மக்களை காப்பாற்ற வழிசெய்யவில்லை என்பதுதான்!! ஆனால் எனக்கு கலைஞர் மீதான வெறுப்புக்கும், ஆத்திரத்திற்கும் அது காரணம் அன்று!!
ஏனெனில் கலைஞரின் கைகளில் அன்று களமுனை மக்களை காப்பாற்றும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது! கலைஞர் மத்தியில் ஆட்சியில் இருந்து விலகிவிடுவேன் என எச்சரித்து, விலகியிருந்தாலும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி; தான் முன்வைத்த காலை பின்வாங்கும் நிலையில் இல்லை என்பது வெட்டவெளிச்சமாக உணரக்கூடிய உண்மை! அந்த விடயம் கலைஞருக்கும் தெரியும், ஜெயலலிதாவிற்கும் நன்கு தெரியும்!! கலைஞர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாததை வைத்து கலைஞரை தமிழினத் துரோகி போலவும், தன்னை ஈழத்து காவலாளி போலவும் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ஒன்றும் ஈழத்துப் பிடிப்பில் அதை செய்யவில்லை என்பதும், அதுவொரு பக்கா அரசியல் என்பதும் சிந்திக்கத் தெரிந்தவர்க்கு தெரிந்த உண்மை!!
அந்தவகையில் எனக்கு கலைஞர் காங்கிரசை விட்டு விலகாததுகூட ஆச்சரியமோ, கோபமோ இல்லை; அவர் தனக்கெதிராக தமிழக எதிர்கட்சிகள் கொண்டு நடாத்தும் தமிழினத் துரோகி பட்டத்தை மறைக்க, தனக்கான இமேஜை நிலை நிறுத்த; தமிழக 'பாமர'மக்களை முட்டாளாக்கத் திட்டமிட்டு நடத்திய உண்ணாவிரத போராட்ட நாடகம்தான் இத்தனைநாள் மாறாத கலைஞர் மீதான கோபத்திற்கு காரணம். அவரது நாடகத்தின் இறுதியில் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்ப்பட்டுவிட்டதாக சொல்லிய பொய்களை இப்போது நினைத்தாலும் மனம் குமுறுகின்றது!!! 'யுத்த நிறுத்தம்' நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என இந்திய செய்திகளில் (தமிழக மற்றும் இந்திய ஆங்கில தொலைக்காட்சிகளில்) அறிவித்த கணம் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களுமே மிகுந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்த தருணம் என்று சொல்லலாம்!!!
பசுமரத்து ஆணிபோல அந்த நாட்கள் இன்னமும் என்நினைவில்; கொழும்பில் ஒரு Food City யில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அம்மாவின் தொலைபேசி செய்தி மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது; "கலைஞர் எங்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார்" என்பதுதான் அந்த செய்தி. அடுத்த கணமே கொழும்பு, யாழ்ப்பாணம் என தமிழர்கள் வாழும் அத்தனை இடங்களுக்கும் இந்த செய்தி மிகப்பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. நான் மதியம் சாப்பிட வீட்டிற்கு வருவதற்குள் உண்ணாவிரதம் 'யுத்த நிறுத்தம்' என்னும் சாதகமான தீர்வுடன் நிறைவடைந்திருந்தது; எல்லோருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி; காரணம் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என மிகவும் வேண்டியவர்கள் யுத்த பிரதேசத்தில் மாட்டிக்கொண்டு தத்தளித்த நேரமது!!! அதனால் அனைவருக்கும் தம் உறவுகள் மீண்டு தம் கைகளில் இணைந்ததாக ஒரு பூரிப்பு!
மறுநாளே கலைஞர் செய்தது உண்ணாவிரதம் அல்ல, அதுவொரு பக்கா அரசியல் நாடகம் என அறிந்தபோது ஒடுமொத்த நம்பிக்கைகளும் தூக்குவாரிப் போட்டன!!! கலைஞர் எம்மை செருப்பால் அடித்ததைபோல உணர்ந்தோம். கலைஞர் என்னும் எழுத்தாளர், அரசியத்தலைவர் மீதிருந்த மரியாதை, ஈடுபாடு எல்லாம் அந்த நொடியிலேயே காற்றில் பறந்தது. அதன் பின்னர்கூட மனதில் ஏதோ ஒரு மூலையில் கடைசி நேரங்களிலாவது கலைஞர் ஏதாவது செய்யமாட்டாரா என்கின்ற நம்பிக்கை இருந்துகொண்டே இருந்தது!. 40,000 பொதுமக்களின் உயிரைவிட தனது அரசியல் வாழ்க்கைதான் முக்கியம் என நினைத்த கலைஞரை எப்படி எமக்கு பிடிக்கும்!!!
அந்த தேர்தல் முடிவுகளின் பின்னர் பிள்ளைகளின் அமைச்சர் பதவிகளுக்காக டெல்லிவரை பேச்சுவார்த்தைக்கு சென்ற கலைஞர் அன்று ஈழத்து மக்களுக்காக கடதாசியும், மின்னஞ்சலும் அனுப்பியதோடு நிறுத்தியிருந்தால்க்கூட எமக்கிந்த கோபமும் ஆத்திரமும் இருந்திருக்காது!! அவரது அந்த ஒருசிலமணிநேர உண்ணாவிரத நாடகம்தான் இலங்கை தமிழ் மக்களுக்கு இரத்தம் உறையும் அளவிற்கு கோபத்தையும்,. ஆத்திரத்தையும் தூண்டியது!!! இந்த ஏமாற்றமும், கோபமும், ஆத்திரமும் இறுதி மூச்சிருக்கும்வரை பல இலங்கை தமிழருக்கு தீராத வடுக்கள்!! எதிரியைகூட மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகியை????
இவை நடந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் கலைஞருக்கு என்ன ஆச்சு? தேர்தல் காலம் கூட இல்லை, அப்படி இருந்தும் ஏன் இப்போதெல்லாம் ஈழம், ஈழம் என்று புலம்ப ஆரம்பித்திருக்கின்றார் என்றுதான் புரியவில்லை!! சனல் 4 இன் 'கொலைக்களம்' பார்த்து கண்ணீர் வடித்ததாக இவர் சொல்லியபோது; இவர் மீதிருந்த கோபமும், ஆத்திரமும் பன்மடங்கு ரீசாஜ் செய்யப்பட்டது!!! இப்போதெல்லாம் இலங்கை தமிழர்கள்மீது பரிவு உண்டாகி தனி ஈழம் என்றெல்லாம் பேசுகின்றார்; இதை கேட்கும்போது ஆத்திரம் தவிர்த்து வேறெந்த உணர்வும் ஏற்படவில்லை!! இந்த லட்சணத்தில் இவரது விசிறிகள் இலங்கை தமிழர்கள் ஈழம் அமைவதற்கு கருணாநிதியை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டுமாம்!! இதை கேட்க்கும்போது நகைப்பை தவிர வேறெந்த உணர்வும் தோன்றவில்லை!!
அன்று ஈழத்து பெண்களை சிங்களம் கற்பழித்தது!!
இன்று ஈழத்து எச்சங்களை தமிழக அரசியல் கற்பழிக்கின்றது!!
தமிழகமே !!!
உங்கள் அரசியல் சுயலாபத்துக்கு எதற்கு எங்களது குருதியையும் நின்மதியையும் சுரண்டுகிறீர்கள்! போதும், தயவு செய்து உங்களது ஈழத்து மீதான காதலின் ஒப்பாரியை நிறுத்திவிடுங்கள்!!! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஈழத்து பெயர் சொல்லி வாக்கு பிச்சை கேட்க்கப்போகின்றீர்கள்!! போதும், தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள்!!! கருணாநிதியும், ஜெயலலிதாவும் அடித்த பல்ட்டிகள் போல் சர்க்கஸ் குரங்கு கூட இத்தனை தடவை குட்டிக்கரணம் போட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்!! அத்தனை பல்ட்டிகளும் உங்களுக்கு ஒட்டு, எங்களுக்கோ வேட்டு!!! உண்மையில் யாராவது தமிழக தலைமைக்கு எம்மீது அக்கறை இருந்தால் தயவுசெய்து இனிமேலாவது எங்களை வைத்து அரசியல் செய்யாமல் விட்டுவிடுங்கள்!! நீங்கள் காட்டும் குறளி வித்தைகள் எம்மை இன்னமும் காயப்படுத்துகின்றது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்!!
* தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் அதிகபட்ச உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன; அதற்க்கு பதிலான ஈடுபாட்டை இலங்கைத் தமிழர்கள் இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை, அந்தவகையில் இலங்கை தமிழனாய் நானும் குற்ற உணர்ச்சி உள்ளவன்தான்!! என் கோபம் அத்தனையும் எம்மை பலிக்கடா ஆக்கும் தமிழக அரசியால் சாக்கடைகள் மீதுதான் அன்றி மக்கள் மீதல்ல!!
எனது ஈழ நண்பனின் மனக்குமுறல்கள்..
*.......*