இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த
சமயம்.
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனின் மீது நாள்தோறும் குண்டுமழை
பொழிந்து கொண்டிருந்த நேரம்.
அப்போதைய இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், பி.பி.சி., வானொலி
நிலையத்திற்கு போன் செய்து, தான் இன்னும் சில நிமிடங்களில் அங்கு வருவதாகத்
தெரிவித்தார்.
காரணம்...
அன்று இரவு பி.பி.சி.,யின் தேசிய ஒலிபரப்பில் அவர் பேசுவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
சர்ச்சில் தன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, எங்கும் இருள்
சூழ்ந்திருந்தது. எதிரிகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்ததால் நாடு முழுவதும்
மின் இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.
சாலைக்கு விரைந்து வந்த சர்ச்சில், வழியில் வந்த ஒரு டாக்சியை நிறுத்தி,
“பி.பி.சி., நிலையத்திற்குப் போக வேண்டும்“
என்றார்.
அதற்கு டிரைவர், “டாக்சி வராது சார். இன்னும் சிறிது நேரத்தில்
சர்ச்சில் ரேடியோவில் பேசப் போகிறார். அதைக் கேட்பதற்குத்தான் நான் வீட்டிற்குச்
சென்று கொண்டிருக்கிறேன்.“ என்றான்.
அதைக் கேட்ட சர்ச்சிலுக்குப் பெருமை பிடிபடவில்லை. இந்த இருட்டில் தன்னை
யார் என்று இவன் அறியாவிட்டாலும் தன் பேச்சிற்கு இத்தனை மதிப்புக் கொடுக்கிறானே
என்று நினைத்த அவர், அவனுக்கு அன்பளிப்பு தர விரும்பினார். உடனே தன் கோட் பைக்குள்
கையை விட்டு பத்து பவுண்டு நோட்டு ஒன்றை
எடுத்தார்.
அவர் பணம் எடுத்ததைக் காரின் உள் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தான்
டிரைவர்.
சட்டென்று அவன் கண்கள் சுடர்
விட்டன!
அடுத்த வினாடி...
”விருட்”டென்று அவர் கையிலிருந்த பணத்தைப் பிடுங்கிய அவன், அதைத் தன் பாக்கெட்டில்
திணித்துக் கொண்டே, “சர்ச்சில் கிடக்கிறார். நீங்கள் ஏறி உட்காருங்கள் சார். உங்களை
கொண்டு போய் பி.பி.சி., நிலையத்தில் விட்டுவிடுகிறேன்“
என்றான்.
அதைக் கேட்ட சர்ச்சில் அசைவற்று அப்படியே
நின்றார்.
படித்ததில் பிடித்தது