Pages

Friday, January 13, 2012

பணக்காரனாக நூறு வழிகள்

பணக்காரனாக நூறு வழிகள்



அந்த ஊரிலேயே பணக்காரர் அவர். நல்ல காரியங்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கும் வள்ளலாகவும் இருந்தார்.

ஒரு நாள் அந்த ஊரில் உள்ள பூங்கா ஒன்றில் குடும்பத்துடன் அவர் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கும்போது கந்தல் ஆடை அணிந்த பிச்சைக்காரன் ஒருவன் எதிரே வந்தான்.

அந்த பிச்சைக்காரன் அந்த செல்வந்தரைப் பார்த்து “ ஐயா! நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். என் தோற்றத்தைப் பார்த்து என்னை பிச்சைக்காரன் என்று எண்ணிவிட வேண்டாம். நான் ஒரு எழுத்தாளன். புத்தகம் ஒன்று எழுதி உள்ளேன் “ என்றான்.

அந்த செல்வந்தர் வியப்புடன் “ அப்படியா! என்ன புத்தகம் எழுதி இருக்கிறாய்?” என்று கேட்டார். “ பணக்காரனாக நூறு வழிகள் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள்ளேன் “ என்றான்.

அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “ எழுத்தாளன் என்கிறாய். பணக்காரனாக நூறு வழிகள் என்று புத்தகம் எழுதியிருக்கிறேன் என்கிறாய். நீ எழுதிய புத்தகத்திற்கும் உன் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லையே. பிச்சை எடுத்து அல்லவா வாழ்க்கை நடத்துகிறாய் “ என்று கேட்டார்.

“ பணக்காரனாக நூறு வழிகளில் இதுவும் ஒரு வழிதான் அய்யா. இதையும் அப்புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் “ என்று பதிலளித்தான் அவன்.

அந்த பணக்காரர் வயிறு குலுங்க சிரித்துவிட்டு புத்தகத்தை வெளியிட அவனுக்கு தேவையான பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.