கோபி உண்மையைத்
தான் சொல்லி இருக்காரு .ஒரு சிலர் தலைப்பில் உள்ளதிற்கு ஓரளவு நியாயம் கூறும் அளவில் எழுதி
இருப்பார்கள். ஒரு சிலர் தலைப்பைத் தவிர சுவாரசியமாக எதுவுமே உள்ளே எழுதாமல் இருப்பார்கள்.
இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று, “தயவு செய்து இந்தப் பதிவை படிக்காதீங்க!” என்று தலைப்பு
வைத்து உள்ளே இழுப்பாங்க.
அதற்கு சற்றும் குறைவில்லாத ஒரு தலைப்புத் தான் கோபி புத்தகம்.
வழக்கமான ஒரு
சுய முன்னேற்ற புத்தகமே இது! எந்த ஒரு புதிய சிறப்பும் இல்லை. கோபி போன்ற பிரபலமானவர்களே இது
போல தலைப்பு வைத்து இழுத்து
ஏமாற்றினால் மற்றவர்களை என்ன கூறுவது? இது கோபிக்கு நிச்சயம் அழகல்ல. இது குறித்து அவர் விளக்கம் கூறி இருந்தாலும், அதை எத்தனை
பேர் கேட்டு இருக்கப் போகிறார்கள்! அப்படியே கேட்டு இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு இருக்கத்
தானே செய்யும். பூட்டி இருப்பதைத்
தான் திறந்து பார்க்கத் தோன்றும்.
ஒரு சில நல்ல
புத்தகங்கள், பதிவுகள்
தலைப்பு சரியில்லாததால்
பலரின் கவனத்தை பெறாமல் சென்று விடும். படிப்பவர்கள் பெரும்பாலும் தலைப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம்
கொடுப்பதே இதற்குக் காரணம். இதற்கு, எழுதுபவர்களும் ஓரளவு நியாயமான முறையில் கவர்ந்து
இழுக்கும் தலைப்புகள் வைக்க
முயற்சிக்க வேண்டும், இல்லை என்றால் அவர்களின் உழைப்பு, திறமை
கவனிக்கபடாமலே போய் விடும்.
வறட்சியான தலைப்புகள் அவர்களின் உழைப்பையே வீணடித்து விடும்.
இதில் ஒரு
பாவமான பிரிவினர் இருக்கிறார்கள். ரொம்ப நல்ல பதிவாக இருக்கும் ஆனால், யாரும் கண்டுக்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் வெறுப்பாகி சர்ச்சையான தலைப்பை வைத்து, “இப்படி தலைப்பு
வைத்தால் தான் வருவீங்க அதனால்
வைத்தேன்” என்று கூறி
இருப்பார்கள்.
ஒருவர் பிரபலமான
நபர் என்றால் அவர் என்ன தலைப்பு வைத்தாலும் சென்று படிக்க தயாராக இருப்பார்கள் ஆனால், அதிகம்
அறிமுகம் இல்லாதவர் எழுதும்
புத்தகம், பதிவு என்றால்
தலைப்பு ரொம்ப முக்கியம். சொல்லப்போனால் பிரபலமானவர்கள் எழுதியதை விட சிறப்பாக ஒரு சாதாரணமானவர்
எழுதி இருக்கலாம் ஆனால்,
கவனிக்கப்பட மாட்டாது. காரணம், உலகம் பிரபலமானவர்களுக்கே முக்கியத்துவம் தரும்.
“சண்டியர்” என்று கமல் தனது படத்திற்கு பெயர் வைத்த போது கடும் எதிர்ப்பு எழுந்தது அதனால், வேறு
வழியில்லாமல் “விருமாண்டி” என்று மாற்றினார். தற்போது அதே “சண்டியர்” என்று ஒரு படம்
வருகிறது. ஒரு சத்தமும் இல்லை. சண்டியர் பெயரை எதிர்த்தவர்கள் இப்ப எங்கே போனார்கள்?
இதை கண்ணதாசன்
வாழ்க்கை சம்பவத்தில் இருந்தே
கூறலாம். ஒருமுறை கண்ணதாசன், தான் எழுதிய கவிதையை ஒரு மாணவனை விட்டு படிக்கக் கூறினார். அங்கே இருந்தவர்கள் எந்த
பாராட்டும் தெரிவிக்கவில்லை. பின்னர் அந்த மாணவன் எழுதிய கவிதையை தான் எழுதியதாக வாசித்தார். இவர்
வாசித்தவுடன் அரங்கில் பலத்த
கைதட்டல். பின்னர் இதைக் குறிப்பிட்டு, “உலகம் யார் கூறுகிறது என்பதைத் தான் பார்க்கிறதே தவிர அவர் என்ன
கூறுகிறார் என்பதை கவனிப்பதில்லை” என்று கூறி இருந்தார்.
இந்தப்
புத்தகம் இவ்வளோ விற்பனையானதிற்கு (2,50,000 பிரதிகளை தாண்டி விட்டதாகக் கூறுகிறார்கள்) காரணம் இதில்
உள்ள விஷயம் அல்ல. முழுக் காரணமும் இதை
எழுதியவர் கோபிநாத் என்பதும் மற்றும் இந்தப் புத்தகத்தின் தலைப்பிற்க்காக மட்டுமே!