அரசியல்
-------------
அரசியல் என்றால் என்ன என்று சிறுவன் கேட்டான்.
அப்பாவும் விளக்கமாகக் கூறத் தொடங்கினார்.
நான் செலவுக்குப் பணம் ஈட்டி வருகிறேன் ஆகவே முதலாளி.
ஈட்டிய பணத்தை செலவு செய்யும் உன் தாய் அரசு
தாத்தா எல்லாவற்றையும் கவனிக்கிறார் யூனியன் எனலாம்
வீட்டு வேலைக்காரி தொழிலாளி என்று சொல்லலாம்
எல்லோரும் பாடுபடுவது உனக்காக, ஆக நீ பொதுஜனம்
உனக்கு அடுத்துப் பிறந்த குட்டிப் பாப்பா எதிர்காலம்
மகனே-இங்கு நடப்பதைப் புரிந்து கொண்டால் அரசியல்
என்ன என்று விளங்கும் ஓரளவு தெரிந்து கொள்வாய்.
புரிந்ததைக் கொஞ்சம் எனக்குக் கூறு என்று கேட்டார் தந்தை.
ஒரு இரவு அசைபோட அவகாசம் கேட்டான் தனையன்.
உறங்கச் சென்ற சிறுவன் தம்பியின் அழுகுரல் கேட்டு விழித்தான்.
ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் முடை நாற்றத்தில் மிதந்தான் தம்பி
செய்வதறியாது பெற்றோரின் படுக்கையற்க்குச் சென்றான் இவன்.
ஆழ்ந்த உறக்கத்தில் தாய், அருகே தந்தை இல்லை.
தாயை எழுப்ப முயன்று தோற்ற தனையன் வேலைக்காரி
இருக்குமிடம் சென்று பார்த்தால் தந்தையின் பிடிப்பில்
கட்டுண்டு கிடப்பவளை பலகணி வழியே ரசிக்கும் தாத்தா.
இவன் வந்ததே தெரியாமல் அவரவர் பணியில் அவரவர்.
ஏதும் செய்ய இயலாமல் இவனும் மீண்டும் உறங்கப் போனான்
மறுநாள் மகனிடம் தந்தை கேட்டார். அரசியல் பற்றி அறிந்தது கூற.
அறிந்தது புரிந்தது என்று மகனும் விளக்க முற்பட்டான்.
“முதலாளி தொழிலாளியைக் கசக்குகிறான். யூனியன் கண்டும்
காணாமல் இருக்கிறது அரசு உறக்கத்தில் இருக்கிறது.
பொதுஜனம் புறக்கணிக்கப் படுகிறது. எதிர்காலமோ
முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கிறது.”
உணவு
------------
நண்பனுக்கு ஜெர்மனியில் வேலை கிடைத்ததாம்..அதனைக் கொண்டாடும் முகமாக அங்கிருந்த இவருடைய நண்பர் “ ட்ரீட் “வேண்டி ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாராம். இவரையும் சேர்த்து நான்கு நண்பர்கள் கூடியிருந்தனராம். அந்த ஓட்டலில் உணவுக்கு வந்திருந்தவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்ததாம். அப்படி உண்பவர் மேசைகளிலும் குறைந்த அளவே தட்டுகள் இருந்ததாம். ஒரு வெகு சாதாரண ஓட்டலுக்கு வந்து விட்டோமோ என்னும் எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. எப்படி இருந்தால் என்ன.. நாம் நன்றாகச் சாப்பிட்டு அனுபவிப்போம் என்று இவர்கள் விதவிதமான உணவுப் பொருட்களும் அதிக அளவிலும் ஆர்டர் செய்தனர். முடிவில் ஆர்டர் செய்த பல பொருட்கள் உண்ணப் படாமலேயே விரயமாயிற்றாம். பார்ட்டி முடிந்து பில் வந்தபோது பில்லில் அபராதத் தொகை என்று ஒரு கணிசமான தொகையும் இட்டிருந்தார்களாம். அபராதம் எதற்கு என்று கேட்டபோது தேவைக்கு மீறி ஆர்டர் செய்து விரயமாக்கியதற்கு என்று பதில் வந்ததாம். “ எங்கள் பணம். நாங்கள் உண்போம் இல்லை வீணாக்குவோம், அதை நீங்கள் எப்படிக் கேட்கலாம் “என்று இவர்கள் கேட்டதற்கு அவர்கள் “பணம் உங்களுடையதாக இருக்கலாம். பொருட்கள் இங்கிருப்பவர்களின் மூலப் பொருட்களிலிருந்து (RESOURCES) “ வந்தவை. . அதை விரயம் செய்வது குற்றம் என்றனராம். நாம் விரயமாகும் எந்தப் பொருளைப் பற்றியாவது சிந்திக்கிறோமா.?
மன அமைதிக்கு
------------------------------
இது ஒரு கேட்ட கதை .பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு முறை புத்த பகவான் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார்.தாகமாயிருக்கவே சீடன் ஒருவனிடம் குடிக்க நீர் கொண்டு வருமாறு பணித்தார்.அவன் அருகில் இருந்த குளத்துக்குச் சென்று நீரை எடுத்து வரப் போனான்.அவன் குளத்தை அடையும் நேரம் அங்கே சிலர் துணிகளை துவைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாட்டு வண்டி குளத்தை கடந்து சென்றது. குளத்து நீர் கலங்கி சேறாய்த் தெரிந்தது. சீடன் திரும்பி வந்து நீர் குடிக்கத் தகுதியில்லாமல் கலங்களாய் இருக்கிறது என்றான்.
ஒரு அரைமணி நேரம் கழிந்து புத்தர் அதே சீடனிடம் நீர் கொண்டு வரச்சொன்னார். இம்முறை குளத்து நீர் தெளிந்து இருக்கவே அவன் புத்தருக்கு நீர்கொண்டு வந்து கொடுத்தான்.
” நீர் தெளிய நீ என்ன செய்தாய். அதை அப்படியே இருக்க விட்டாய். அதுவும்தெளிந்தது. நம் மனமும் அது போல்தான். குழம்பிப் போயிருக்கும்போதுஅப்படியே விட்டு விட வேண்டும் அதை தெளிவிக்க எந்த முயற்சியும் தேவைஇல்லை. தானாகத் தெளியும்.மன நிம்மதி பெற எந்த முயற்சியும் தேவை இல்லை. உள்ளம் அமைதியாய் இருந்தால் அது இருக்கும் சூழலையும்அமைதியாக்கும்.