90களின் காலைப்பொழுது எப்பொழுதுமே ரசிக்க கூடியதாகவோ, அல்லது சேவல் கூவல்களுடனோ திருகோணமலைக்கு விடிவது இல்லை. திருமலைக்கு மட்டுமல்ல பல இடங்களுக்கும் அப்படிதான். இதே போன்ற ஜூன் மாதத்தில் ஒருநாளும் அப்படித்தான் துப்பாக்கி வேட்டுக்களின் அதிரல்களுடன் திருமலை நகரமே திடிரெண்டு விழித்து கொண்டது. ஆனால், ஒருவனுக்கு மட்டும் அன்றைய இரவு தூக்கம் இல்லாமல் வெறும் கனவுகளால் மட்டும் நிரம்பி இருந்தது. அவனது செல்ல குழந்தை அவனை தூங்க விடாது, அவனது கனவுகளை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது. இந்த குழந்தையை எப்படி வளர்ப்பது? என்ன படிக்க வைப்பது? என்ன என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்ற கனவுகளுக்கு மத்தியில் அந்த குழந்தையின் சிறு சிறு அழுகை சினுங்கல்களையும், தன் மனைவியின் தாய்மை உணர்வுகளையும் ரசித்தவனாகவும் படுத்திருந்த அவனையும் அந்த வெட்டு சத்தங்கள் கொஞ்சம் அதிரவே வைத்து இருந்தது.
“வழமையா மகன் அழுது எழுப்பி விடுவான்,இண்டைக்கு ஆமிக்காரன்கள் எழுப்பி விட்டுட்டானுகள். இண்டைக்கு என்ன தலைவலி இருக்குதோ!” என்று, மனைவியிடம் குறைபட்டு கொண்டவனாக, எழும்பி வெளியே என்ன நடந்து இருக்கும் என்று பார்ப்பதார்க்கு வீட்டு கதவை திறந்து கொண்டு வந்தவனை, அவன் வீட்டு எதிர் வீட்டுக்காரன்தான் முதலில் எதிர் கொண்டான். “என்னப்பா இண்டைக்கு முதல் முதலா பாதர்ஸ் டே கொண்டாடுறாய் போல, வீட்ல சொல்லி எங்களுக்கு நல்ல சதைக்கோழியா சமைச்சு அனுப்பு என, நக்கலாக சொல்லிவிட்டு அவரும் வெட்டு சத்தங்களின் காரணங்களை அறிய சந்தியை நோக்கி பயனிக்க்கலானார்.”
மறுபடியும் இவனுக்குள் ஒரு பெருமிதம், தன்னை பற்றி அவர் சொன்னதையும், தன் மகனையும் தன் தந்தையின் நினைவுகளையும் மெல்ல அசைபோட்டவனாக கொஞ்சம் தந்தை என்ற இறுமாப்புடன் அவனும் சந்தியை நோக்கி நகர தொடங்கினான்.
சந்தியை அடைந்ததை கூட தெரியாமல் சிந்தையில் மூழ்கி இருந்தவனை மீள உயிர்பித்தது ராணுவத்தின் ஒலிபெருக்கி மூலமான அறிவித்தல் ஒன்றுதான், “திருமலை நரக மகளுக்கு ஒரு நியூஸ், ஊருக்குள்ள கொட்டியா நடமாட்டம் இருப்பதால் எல்லாரையும் ரவுண்டப் பண்ணி சோதனை பண்ண போரம். வீட்ல இருக்கிற ஆம்பிளைகள் எல்லாம் மக்கேசர் கிரவுண்டுக்கு 9 மணிக்கு எல்லாம் வந்துரனும். வரக்குள்ள பாமிலி கார்ட், ஜடேண்டி கார்ட்,ஆர்மி ஜடேண்டி எல்லாம் கொண்டு வரணும்....! வீட்ல யாரும் மறைஞ்சு இருந்தா கொட்டியா எண்டு சுட்டுருவம்!!!!” என்று அரை தமிழில் வந்த ஒலிபெருக்கி அறிவிப்புடன் அவனை வண்டி கடந்து செல்லவும், அவன் தன் மணிகடிகாரத்தில் நேரம் பார்க்கவும் சரியாக இருந்தது.
நேரம் 8.45
சந்தியிலிருந்து வீட்ட வந்து எல்லா வேலைகளையும் செய்து விட்டு, குழந்தையுடன் செல்லமாக விளையாடி விட்டு மெதுவாக கால் முடியாத தன் மாமாவுடன் சைக்கிளில் மெக்கேசர் கிரவுண்டுக்கு ஒரு வித பய உணர்வுடன் பயணிக்கிறான்.
மெகேசர் மைதானம் முழுவதும் ஆண்களால் கிட்டதட்ட நிரம்பியே இருக்கிறது. மைதானத்துக்கு வெளிய சில பெண்கள் தங்கள் கணவர்கள் மீள சோதனை முடிந்து முழுதாய் வர வேண்டும் என்று கடவுளை பிரார்த்திப்பது நன்றாகவே தெரிகிறது. அதில் இவன் மனைவியும்,குழ்ந்தையும் என்னும் சில உறவுகளும் இருப்பதை கண்டு கொண்ட அவன் மீண்டும் ஒரு முறை அந்த பிஞ்சு குழந்தை முகத்தை பார்த்து கொள்ளுகிறான். எதுவும் அறியாத அந்த குழந்தை அம்மாவின் தோளில் தலை சாய்த்து உறங்கி கொண்டு இருக்கிறது இனி தன் தந்தையை பார்க்க முடியாது என்பது கூட தெரியாமல்! விசாரணை வரிசை மெல்ல மெல்ல நகர தொடங்குகிறது.
முதலில் ஒரு ஆமிக்காரனிடம் கொண்டு வர சொன்னபாமிலி கார்ட், ஜடேண்டி கார்ட்,ஆர்மி ஜடேண்டி எல்லாம் காட்டனும். பிறகு, மற்றவர் கேட்கும் அரை குறை சிங்கள கேள்விக்கும் அவருக்கு அடிபோடியாக இருக்கும் தமிழர் சொல்லும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். இறுதி சோதனை பெரிய சோதனை அதுதான் “தலையாட்டி சோதனை”. அதாவது, தலையாட்டி என்பவர் அல்கொய்தா தீவிரவாதிகள் போல, கண்கள் மட்டுமே தெரிய கூடியவாறு முகமூடி போட்டு உட்கார வைத்து இருக்கபடுவார். அவர் ஆமிக்காரரிடம் சிக்கிய நம்மவர்.(அவன் சிக்கிய பிறகு படும் கஷ்டம் அவனுக்கு மட்டுமே வெளிச்சம்) அந்த முகமூடிகாரனுக்கு முன்னால், முதல் சொன்ன ரெண்டு சோதனைகளிலும் பாஸ் ஆனவர் நிருத்தபடுவார். அப்படி நிக்கும் போது இவரின் தலை கொஞ்சம் ஆடிவிட்டால், முன்னாள் நிப்பவரை வாழ்கையில் நீங்கள் மறந்து விடலாம். அடுத்து அவர்களுக்கு என்று ஒரு பஸ் வண்டி தயாராக இருக்கும். அதில் ஏற்ற்ப்படும் வரை அந்த அற்ப ஜீவனை நீங்கள் கண்கொள்ள பார்த்து ரசிக்கலாம். அதுக்கு பிறகு அந்த ஜீவனை இந்த உலகின் எந்த மூலையிலும் காண முடியாது. தலையாட்டி ஒன்றும் வேண்டுமென்றே கழுத்தை ஆட்டுவரோ என்று யோசிக்கலாம். இல்லை ஒரு மனுஷன் எவ்வளவு நேரம்தான் கழுத்தில் அடிவாங்கிய பிறகும் தலையை ஆட்டாமல் வைத்து இருக்க முடியும்????
அவனும் மெல்ல மெல்ல சோதனை கூடத்தை அண்மித்து கொண்டு இருக்கிறான். மெல்ல மெல்ல பஸ் வண்டிகளில் கூட்டம் சேர்ந்து கொண்டிருப்பதும், கூடி இருந்த பெண்கள் கூட்டத்தில் அழுகை குரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டிருப்பதும், தெளிவாக தெரிகிறது. அதற்க்குளும் அவனுக்கு தன் குழந்தை எண்ணமே! தன் குழந்தையை தேடுகிறான். அந்த குழந்தை எதையும் அறியாமல் அந்த கூட்டத்திடில் அம்மாவின் அரவணைப்பில் தூங்கி கொண்டு இருக்கிறது. இப்போது அடுத்ததாக சோதனை கூடத்துக்குள் அவன் செல்லும் முறை, முதலாவது சோதனையும், இரேண்டாவது சோதனையும் முடிந்தாகிவிட்டது. மூன்றாவது சோதனை, தலையாட்டி முன்னால், அவன் நிறுத்தபடுகிறான். தலையாட்டி தலையை ஆட்ட மாட்டான் என்ற சின்ன நம்பிக்கை அவனுக்கு. காரணம், எதிர் எதிரே நிற்கும் இருவரும் ஒரே இனமல்லவா!!!! ஆனால், நடந்தது எதிராக, தலை சிறிது அசைகிறது. அவனின் நம்பிக்கை உடைகிறது. இரண்டு ராணுவ வீரர்கள் வந்து அவனை மெல்ல அந்த இறுதி ஊர்வல வண்டிக்கு இழுத்து செல்கிறார்கள். அவன் “தலையாட்டி தலையை ஆட்ட இல்லை” என்று தனக்கு தெரிந்த சிங்களத்தில் உளருகிறான், பயனிலை என்பதும் தெரிந்ததுதானே!!!
இறுதியாக, எல்லாம் முடிந்தது. பஸ் வண்டி புறப்பட இருக்கும் நேரத்துக்கு முதல் அதில் இருப்பவர்கள் அனைவருக்கு ஒரு 5 நிமிடம் அங்கு இருக்கும் உறவுகளை இந்த பூவுலகில் இறுதியாக பார்க்கும் சந்தர்ப்பம் வழங்கபடுகிறது. அவன், தன் மனைவியையும், பிள்ளையையும் பார்க்கிறான். யாருமே வார்த்தைகளால் பேசவில்லை. அழுகையும், கண்ணீரும் பேசி கொள்ளுகிறது மிக நீண்ட கதைகளை, தான் இல்லாமல்தான் தன் குழந்தையும் தன் மனைவியும் வாழபோகிறார்கள்? என்பதை நொடிக்கு ஒரு முறை நினைத்து பார்த்து உறுதி செய்து கொள்கிறான்.
இன்னும் அந்த பிஞ்சு குழந்தை எதையும் உணராமல் தன் அம்மாவின் கண்களில் இருந்து வழியும் கண்ணீரில் கோலம போட்டு விளையாடி கொண்டு இருக்கிறது. இறுதியாக தன் தந்தையின் அரவணைப்பில், இருந்தவாறே!!!!
ஆமிக்காரர் எல்லோரையும் ஏறும்படி சொல்லுகிறார். அந்த தந்தை தன் மகனை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, இறுதி சாசனத்தை தன் வாய்மொழி மூலமாக தன் மனைவிக்கு எழுதி கொடுத்துவிட்டு, செல்கிறார்ன்
“நான் திரும்ப வரபோறது இல்ல எண்டு உனக்கு தெரியும்....! எப்படியும் கஷ்ட்டபட்டாவது எண்ட மகனை வளர்த்து போடு!!!! அவன் எந்த பாவமும் செய்யல நமக்கு பிள்ளையா பிறந்ததை தவிர, அவனுக்கு நாங்க எழுதி வச்ச பெயர் துண்டில நாலாவது பெயரை வை அதுதான் அவனுக்கு சரியான பொருத்தமா இருக்கும்!!! கண்டிச்சு நல்லா வளர்த்து போடு! பிறகு அப்பன் இல்லாம காட்டானா.வளர்த்து போடாத!!! எண்ட ஆசை எல்லாமே அவனை நல்லபடியா வளக்கிறதுதான்!!!! என்று, சொன்னபடியே நகருகிறான்.
தன் மனைவி அழுவதும், கதறுவதும் அவனுக்கு தெரிகிறது. அதை எல்லாம் தாண்டி, தன் மகன் தன்னை பார்த்து சிரித்தபடி இருப்பது மட்டுமே! அவனுக்கு புரிகிறது. இறுதி கணங்களில் அதுதான் அவனின் இறுதி ஆசை என்று தெரிந்துதான் அந்த குழந்தை சிரிக்கிறது போலும்.....! பஸ் வண்டி தனது இறுதி பயணத்தை ஆரம்பிக்கிறது கூடவே, இவனும்!!!!
அந்த குழந்தைக்கு அவன் வைக்க சொன்ன பெயர்“அனுதினன்”
என்னை போல,எத்தனையோ நண்பர்கள் இப்படித்தான் இலங்கையில் தந்தையர் தினத்தை நினைவு கூர்ந்து கொண்டு இருப்பார்கள். அவர்களை போல இல்லாத என் தந்தைக்கும், இருக்கின்ற அணைத்து தந்தையர்க்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள்!!!
49 comments:
புரிகிறது அண்ணா. அனைத்துக்கும் காலம் விரைவில் பதில் அளிக்குமாக
தமிழர்கள் தந்தையர் தினங்கள்,அன்னையர் தினங்கள், நண்பர்கள் தினங்கள் எல்லாம் அடுத்தவரின் கட்டளைப்படிதான் அனுஸ்டிக்க வேண்டும் என்ற நிலை இன்று வரை தொடர்வது வேதனை...என்ன செய்வது..??
தங்களின் தந்தையாரின் பெயரை அறிய நினைக்கின்றேன்
எதிர்ர்பார்க்கவிலை இப்படி ஒரு வடு இருக்குமெண்டு...
இனிப்பிறக்கும் எந்த குழந்தைக்கும் இப்படியான சோதனைகள் தொடாரதிருக்க வேண்டும்.
இத்தனை துன்பங்களிலும் இத்தனை கொடுமைகளுக்குள்ளும், கோழி தன் குஞ்சுகளை இறக்கைகளின் உள்ளே காப்பாற்றுவதுபோல தமது குழந்தைகளை வளர்த்தாளாக்கிய அத்தனை சிறப்பான தந்தையர்களுக்கும் சிரந்தார்த்தி நன்றியும் வாழ்த்தும் சொல்லவேண்டியது எமது கடப்பாடே என்றால் அது மிகை இல்லை.
பலரது வாழ்க்கை சம்பவங்களை உங்களது சம்பவம் நினைவுபடுத்துகிறது! I am very sorry Anuthinan! இறைவன் இன்னமும் இருந்தால் உங்களது வலிகளுக்கான தண்டனை கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்கும்!!
feeling sorry for you bro :)
நீண்ட ஆறுதல்கள் தம்பி........
தந்தை என்ற உறவு எவ்வளவு முக்கியமானது என்று நான் தந்தையான பின்னர் உணர்ந்தேன்..
தந்தை இல்லாத நாட்கள் ஏழை ஏன் மகனும் சின வயதிலேயே உணர்ந்துவிட்டான்..
இன்று உங்கள் பதிவை வாசித்த பின்னர் தற்செயலாக நான் திரும்பாவிடில் அவனுக்கும் இதே நிலை தான் என்பதை வலியுடன் உணர்ந்தேன்.
உங்கள் அம்மாவுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்..
நீங்கள் ஒரு நல்லவனாக இன்று சமூகத்தில் உயர்ந்து உங்கள் அப்பாவை மட்டுமல்லாமல் அம்மாவையும் கௌரவப்படுத்தியுள்ளீர்கள்.
வாழ்க்கையை மேலும் வென்று உங்கள் அன்னைக்கு மேலும் பெருமையைச் சேருங்கள்.
என்னால் முடிந்தவரை இந்தப் பதிவை ஏன் நண்பர்களுக்கும் நேயர்களுக்கும் கொண்டு சேர்த்துள்ளேன்.
a few drops of tears is all I have...
//
டேய்
வேலை செய்யும் இடத்தில் இருந்து வாசித்தேன்....கண்கள் என்ன செய்திருக்கும்....
இன்று அந்த தந்தை நினைத்ததை நீ செய்து முடித்துவிட்டாய்,.....அந்த தந்தைக்கு படித்து பலகலைக்கழகம் போய் ஆசையை நிறைவேற்றி விட்டாய்,.....எங்கிருந்தாலும் அவர் மனம் உனக்காய் பிரார்த்திக்கும். உன்னை என்றும் வழிநடத்தும்.....
வாசித்து முடிக்கும் போது கண்ணீர் துளிகளே மிஞ்சுகிறது.........
உயிரை கசக்கி பிழிந்து அழ வைத்த வரிகள் .என்ன ஒரு ஜீவ மரண போராட்டம் .