பொதுவாழ்வில் தூய்மை
அரசியலில் நேர்மை
இவைதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிவிக்கப்பட்ட கொள்கைகள். அரசியல் கட்சிகளுக்கு கொள்கை என்பது கொடிபோன்ற ஒரு அடையாளம்தான். இதற்கு மேல் கட்சியின் நடவடிக்கைகளுக்கும், ஏன் கட்சித் தலைவரின் நடவடிக்கைக்கும் சம்பந்தம் இருக்கது என்பது இன்றைய நியதி.
ஆனால், வைகோவைப் பொறுத்தவைர இந்தக் கொள்கைகளை கட்சியிலும் சரி, தனது தனிமனித வாழ்விலும் சரி கடைபிடித்து வருகிறார். அதெல்லாம் சரி. இத்தனை இருந்தும் 'இப்ப வெளுத்தியா?; என்று கேட்கலாம். தமிழ்நாட்டு அரசியலில் புதிரான பல விசயங்களில் வைகோ போன்ற உறுதியும் நேர்மையும் கொண்ட தலைவர் ஏன் பெரிதாக ஜெயிக்க முடியவில்லை என்பதும் ஒன்று. இதற்குப் பதில் சற்று கொச்சையாக இருந்தாலும் நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் பித்தன் என்பதாகத்தான் இருக்க முடியும்.

தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் சினிமாக்காரர்கள் - விஜயகாந்த, சரத்குமார் உட்பட. சினிமா தொடர்பில்லாத தலைவர்கள் என்றால் அநேகமாக சாதிகட்சித் தலைவர்களாகத்தான் இருக்க முடியும். இந்த இரண்டு வகையிலும் சேராத ஒரே இயக்கத் தலைவர் வைகோதான். அவரது பிளஸ் பாயிண்ட் இதுவென்று சொன்னாலும், அதுவே மைனஸ் பாயிண்டோ என்று சந்தேகப்பட வைக்கிறது. சுதந்திர இந்தியாவில் பாரம்பரியமாக இருந்துவரும் கம்யூனிஸ்டுகள் நீங்கலாக, சினிமா-சாதி சாராத முதல் முறை அரசியவாதி வேறு எவரும் இவரளவிற்கு மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே ஒரு தாக்கத்தை உண்டு பண்ணவில்லை.

1993இல் திமுகவிலிருந்து பிரிந்தபோது அங்கே இவர் இரண்டாம் நிலைத் தலைவர். உள்ளபடியே இவர்தான் திமுகவின் ஒரிஜினல் தளபதி. வாரிசு அரசியலை விமர்சனம் செய்யப்போய் விலகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். கருணாநிதியைப் பொறுத்தவரை அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, இரண்டாம் நிலையில் இருந்த நெடுஞ்செழியனை எம்ஜிஆர் உதவியுடன் புறம்தள்ளி சிம்மாசனம் ஏறியவர். ஏறிய பின்னால் எம்ஜிஆரையும் அவர் கணக்கு கேட்டு பிணக்கு செய்தபோது, லாவகமாக கழட்டிவிடத் தெரிந்தவர். தானாடுவதைவிட சதை அதிகமாக ஆடுமே - கட்சியில் ஸ்டாலின் வளர்ச்சிக்கு வைகோ முட்டுக்கட்டையாகி விடுவாரோ என்ற கவலையில் வைகோவை உதறத் துணிந்தார் கலைஞர். அதிலிருந்து 18 ஆண்டுகள் படாதபாடுபட்டுக் கட்சியை நடத்தி வரும் வைகோவிற்கும் 18 என்ற எண்ணுக்கும் சிறப்புத் தொடர்புண்டு. 18 ஆண்டுகள் தொடர்ந்து ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தவர். 18 மாதங்கள் விடுதலைப் புலிகள் ஆதரவிற்காக பொடாவில் சிறைவாசம் அனுபவித்தவர். பாரபட்சமில்லாமல் வெவ்வேறு காலகட்டத்தில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடனும் கூட்டணியில் இருந்திருக்கிறார். இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் ஈழத்திற்காக சிறையிலிருந்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் tiger of parliament என்று பெயர் வாங்கியதுடன் இரா. செழியனுக்குப் பிறகு best parliamentarian என்று தேசிய அளவில் கட்சி வித்தியாசமின்றி பாராட்டப்பட்டவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த பேச்சாளர் - இலக்கியவாதி. இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர். இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்து கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக அவ்வப்போது தங்கள் நிலைப்பாட்டை சட்டை கழற்றுவதப்போல் மாற்றிக் கொண்டாலும் அன்றிலிருந்து இன்றுவரை ஈழத் தமிழனுக்குத் தமிழ்நாட்டில் தொடர்ந்து தைரியமாக ஒலிக்கும் உறுதியான குரல் வைகோவினுடையது. இவருடைய அரசியல் முடிவுகளை விமர்சிப்பவர்கள்கூட இவரை- இந்தத் தனிமனிதரைப் பெரிதாக விமர்சிப்பது கடினம்.
மத்தியில் ஆளும் எந்தக் கட்சியுடனும் கண்ணியமான rapport வைத்திருந்ததுடன், மத்திய அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பைத் தன் பிரதிநிகளுக்கு கொடுத்தவர்.
வாரிசு அரசியலை விமர்சனம் செய்த பிற கட்சித் தலைவர்கள் பலர் தங்கள் வாரிசுகளை தங்கள் கட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இவரது குடும்பத்தினர் யாரையும் இவர் பெரிதாக அரசியலுக்குள் நுழைக்கவில்லை. பின் எங்குதான் தவறுசெய்தார் வைகோ? இவருடைய குறைபாடுகளாக மூன்று விசயங்களைச் சொல்லலாம்.
ஒன்று இவருக்குச் சரியான இரண்டாம் கட்டத் தலைவர்கள் அமையவில்லை. அப்படியே அமைந்தவர்களையும் இவர் சரியாக அனுசரித்து அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். தவறு எந்தப் பக்கம் என்பதல்ல முக்கியம். அதை ஒரு தலைவர் எப்படிக் கையாண்டு சமாளிக்கிறார் என்பதுதான் சாமார்த்தியம். தமிழகம் முழுக்க அரசியல் கட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை, கட்சித் தலைவருக்கும் அடுத்த நிலைத் தலைவருக்கும் அதிகார இடைவெளி சற்று அதிகமிருப்பதுதான் தலைமைக்குப் பாதுகாப்பு (!) என்பது பாரம்பரியம். இவரைவிட அரசியலிலும் வயதிலும் மூத்தவர்களை இரண்டாமிடத்தில் வைத்த முடிவு எதிர்மறை விளைவுகளை உண்டாக்கியிருக்கலாம்.
இரண்டாவது இவர் மேல் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த தமிழக இளைஞர் பட்டாளத்தைச் சரியாகக் கையாளத் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது
மூன்றாவது குறை - இவர் ஏளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்று விமர்சிக்கும் அளவு இவரது அரசியல் முடிவுகளை அவரது உணர்ச்சிகள் பாதித்திருக்கின்றன. நமக்கெதிரே அநியாயம் இழைக்கப்படுக்போது பொங்கி எழுவது இயல்புதான். அதே சமயம் எங்கே பொங்க வேண்டும், எங்கே பதுங்க வேண்டும் என்கிற உபாயத்தை வைகோ தன் முன்னாள் தலைவரிடம் கற்றுக்கொண்டால் நல்லது. சுருக்கமாகச் சொன்னால் அவர் இன்னும் மகாத்மா காந்தி பாணியில் பாதயாத்திரை சென்று பல விசயங்களைச் சாதிக்க நினைக்கும் ட்ரெண்டிலிருந்து விலகி இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன் ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டும்.
நேர்மையும், உறுதியும் கொண்ட ஒருவரை இப்படி மாறச் சொல்வது நியாயமா என்று கேட்கலாம். என்ன செய்வது மினி-மிடி நாகரிகம் வந்த பிறகு மடிசார் புடவை கட்டுபவர்கள் நிலைதான் வைகோவுக்கும். நல்ல கொள்கைகளை விடச் சொல்லவில்லை. நடையை மாற்றுங்கள் அவ்வளவுதான். இந்தத் தேர்தலில் எத்தனையோ தொகுதிகளில் நின்று தோற்றுப்போன கட்சிகளைவிட தேர்தலில் நிற்காமலே இருந்துவிட்டது பெரிய தோல்வி அல்ல.
ஏமாற்றமும், விரக்தியும் இயல்பாக இருக்கும்தான். ஆனால் உங்களுக்குள் ஒரு மாற்றம் கண்டால், உங்களால் மீண்டு வரமுடியும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இல்லாவிட்டால் என்ன? மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சியாகச் செயல்படுங்கள். உங்களைச் சுற்றியிருக்கும் இளைஞர்களை இரண்டாம் தலைவர்களாக்கி தோள் கொடுக்கச் செய்யுங்கள். அரசியல் வானில் எப்பொழுது வேண்டுமானாலும் காட்சிகள் மாறும்
உங்கள் மேல் எதற்கு இத்தனை கரிசனை என்கிறீர்களா? ஒரு நல்ல தலைவர் வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியம். அதைவிட ஒரு நல்ல தலைவர் தோற்றுப் போய் அதன்மூலம் நல்லதும் தோற்றுவிடக் கூடாதென்ற ஆதங்கம்தான் - தமிழக மக்களுக்கும்