ஹாரர் படங்களை நினைவுப்படுத்திய இலங்கை போர்க்குற்றங்கள்
இந்தியாவைத்தவிர உலகநாடுகள் எல்லாம் குறிப்பாக ஐரோப்பா நாடுகள் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மத்திய காங்கிரஸ் அரசு இதை தடுத்து வருகிறது. Channel 4 என்ற செய்தி நிறுவனம் ஏற்க்கனவே பல போர்க்குற்றக் காணொளிகளை வெளியிட்டு வந்தாலும் தற்போது வெளியிட்டுள்ள காணொளிகள் பல ஹாரர் படங்களை நினைவுப்படுத்துகிறது.

பொதுவாக போர் நடைபெறுகிறது என்றாலே அங்கே இது போல சில சம்பவங்கள் கண்டிப்பாக நடைபெறும் அது இலங்கை என்றில்லை எந்த நாடாக இருந்தாலும் இது போலவே நடந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக ஈராக் ல் அமெரிக்க இங்கிலாந்து படைகள் செய்ததையும் சமீபத்தில் லிபியாவில் கடாபி படைகள் பெண்களிடம் நடந்து கொண்ட விததத்தையும் கூறலாம். குறிப்பாக லிபியாவில் பெண்களை வன்புணர்வு செய்ய கடாபி தனது வீரர்களுக்கு வயாகரா மருந்துகளை வாங்கினார் என்ற குற்றச்சாட்டு தற்போது உலவிக்கொண்டுள்ளது.
மேற்கூறியவற்றை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் விதமாக ஈழப்போரில் இலங்கை இராணுவ வீரர்கள் விடுதலைப் புலிகள் இல்லாமல் பொதுமக்களையும் சூறையாடி இருக்கிறார்கள். அதாவது அங்கே அவர்கள் வைத்தது தான் சட்டம்….. யாரும் எதுவும் கேட்க முடியாது. இவர்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை செய்யக்கூடிய அதிகாரத்தை ராஜபக்சே கொடுத்து இருந்தார். ஹாஸ்டல் என்ற ஒரு படத்தில் வருவதைப் போலவே இருந்தது இவர்கள் செய்து இருந்த நிகழ்வுகள். ஆண்களை கத்தியால் வெட்டி அறுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொன்று இருகிறார்கள். பெண்களை என்ன செய்து இருப்பார்கள் என்பதைக் கூறினால் கல் மனமும் உடைந்து விடும்.
இப்படிப்பட்ட இரக்கமற்றவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று தான் ஐரோப்பா நாடுகள் போராடி வருகின்றன. நியாயமாக இதை இந்தியா தான் செய்து இருக்க வேண்டும் ஆனால் அத்தனை மக்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியும் கண்டுகொள்ளாத காங்கிரஸ் அரசு இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்கி அவர்களை மேலும் ஊக்குவித்தது.
மத்திய அரசு தான் அவ்வாறு செய்து விட்டது என்றால் அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் அரசு தந்தி அனுப்பியும் கடிதம் அனுப்பியும் தங்கள் “எதிர்ப்பை” தெரிவித்துக்கொண்டு இருந்தார்கள். கலைஞரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்து கொண்டு போன போது “ஐயோ அம்மா கொல்றாங்களே” என்று கதறியதைக்கேட்டு மனம் உடைந்த தமிழர்கள் அடுத்து நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு இடம் கூட ஜெ க்கு தராமல் 40 இடத்தையும் திமுக விற்கே வாரி வழங்கினார்கள் ஆனால் மக்கள் கொடுத்த பலத்தை மக்களுக்காக ஒரு விசயத்திற்க்குக் கூட மத்திய அரசை மிரட்ட தவறிவிட்டது காரணம் எதிர்ப்பை காட்டினால் காங்கிரஸ் கூட்டணி பாதிக்கப்படும் என்று.
தமிழினத்தலைவர்
இந்தவார்த்தையையே அசிங்கப்படுத்தி விட்டார் கலைஞர். ஈழத்தில் இருந்து எத்தனை கூக்குரல்கள் வேண்டுகோள்கள்… அனைத்திற்கும் அமைதி மட்டுமே பதிலாக இருந்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல எல்லாம் முடிந்த பிறகு மூன்று மணிநேர உலகதிசய உண்ணாவிரதம் இருந்து போர் நின்று விட்டது என்று எஸ்கேப் ஆன மரியாதைக்குரியவர் இந்த தமிழினத்தலைவர்.
தமிழக மக்கள் கொடுத்த 40 MP க்களைப் பெற்ற பிறகு IT துறையை கொடுக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று கூறினார். மகன் மற்றும் மகளுக்குப் பதவியைப் பெற சக்கர நாற்காலியில் டெல்லி சென்று சண்டையிட்டுப் பெற்று வந்தார். சட்டமன்றத் தேர்தலின் போது காங் கூட்டணி தொகுதி உடன்படிக்கையில் பிரச்சனை ஏற்பட்ட போது கூட்டணியில் இருந்து விலகுவதாக பயம் காட்டினார். அதன் பிறகு கனிமொழியை கைது செய்த போது மறுபடியும் டெல்லி சென்று பார்த்து வந்தார்.
இதைப்படித்துக்கொண்டு இருக்கும் அனைவரையும் கேட்கிறேன். உங்கள் மனசாட்சியைத் தொட்டுச்சொல்லுங்கள் இவர் செய்ததில் ஒன்றாவது மக்கள் பிரச்னைக்கு என்று இருந்து இருக்கிறதா? அனைத்துமே தன்னுடைய கட்சி பதவி மற்றும் தன்னுடைய குடும்பம் மட்டுமே சார்ந்துள்ளது. ஒன்றே ஒன்று கூட மக்கள் பிரச்சனைக்காக இல்லை. ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக கடிதம் அனுப்புகிறார் கட்சி குடும்ப நலனுக்காக டெல்லிக்கு நேரில் செல்கிறார். இப்படி நடந்து கொண்ட இவருக்கு எதற்கு தமிழினத் தலைவர் பட்டம்? யார் இதை கொடுத்தார்களோ! சிறையில் இருக்கும் கனிமொழியைப் பற்றிக்குறிப்பிடும் போது “மலர் சிறையில் வாடுகிறது” என்று கண்கலங்குகிறார்.
என்னால் சத்தியமாக இதை எல்லாம் சகிக்கவே முடியவில்லை. 40 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் இறந்து இருக்கிறார்கள், பல நூறு மக்கள் கை கால்களை இழந்து இருக்கிறார்கள் இதில் குழந்தைகளும் அடக்கம் அப்போதெல்லாம் வராத இரக்கம் கவலை தனது பெண்ணை சிறையில் அடைத்து விட்டார்கள் என்றவுடன் பாசம் பொங்கி டெல்லி செல்கிறாரே! அது எப்படி! எத்தனை மக்கள் காப்பாற்றக்கூறி கதறினார்கள் கல் நெஞ்சமும் கரைந்து விடுமே கலைஞர் நெஞ்சம் அதைவிடக் கடினமானதா! இது தான் அவருடைய நெஞ்சுக்கு நீதியோ!
தமிழக அரசு சார்பில் இலங்கை சென்று அங்கே எல்லாமே சூப்பர்! ஒரு பிரச்சனையும் இல்லை என்று வாய்க்கூசாம கூறினீர்களே! நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா! பணம் பணம் என்று எல்லோரும் அலையறீங்களே அப்படி இவ்வளவு பணத்தை வைத்து என்ன தான்யா பண்ணுவீங்க? ஒருநாளைக்கு ஒரு கோடி என்று வாழ்க்கை முழுவதும் நீங்கள் அனைவரும் செலவழித்தால் கூடபணம் தீராதே அப்புறமும் என்னையா பணம் பதவி! தற்போது பணம் இருக்கிறது என்று சந்தோசமாக இருந்தாலும் பின்னர் நிச்சயம் எங்களுக்கெல்லாம் தெரியாத வகையில் நீங்கள் துன்பப்படத்தான் போகிறீர்கள். ஈழத் தமிழர்களின் சாபம் கண்ணீர் உங்களை நிச்சயம் சும்மா விடாது. நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் பின்வரும் தலைமுறையை கண்டிப்பாக பாதிக்காமல் விடாது.
ராகபக்சே நிச்சயம் ஒரு மனிதப்பிறவியாகவே இருக்க முடியாது. என்னதான் கோபம் ஆத்திரம் இருந்தாலும் ஒரு வரைமுறையே இல்லாத அளவிற்கு வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இருப்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இடி அமீனுக்கு சற்றும் குறைவில்லாத குற்றங்களை இவரும் செய்துள்ளார் அதுவும் பெண்களுக்கு எதிராக இவரது வீரர்கள் செய்ததை நினைத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. இதற்கு துணை போய் இருப்பது சோனியா அரசு. என்ன தான் விடுதலைப்புலிகள் ராஜீவை கொன்று விட்டார்கள் என்ற கோபம் இருந்தாலும் அதற்காக இத்தனை ஆயிரம் பொது மக்களை கொல்ல துணை புரிய எப்படி மனது வந்தது? சோனியாவும் ஒரு பெண் தானே அங்கே பாதிக்கபடுவதும் பெண் தானே என்ற உணர்வு கருணை கொஞ்சம் கூடவா இல்லை. பெண்ணின் மனது பெண்ணிற்குத் தான் புரியும் என்பார்கள். இவரை என்னவென்று கூறுவது?
இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும்
இவர்களுக்கிடையே மாட்டிக்கொண்டு பொதுமக்கள் பட்ட பாடு இருக்கிறதே! கொடுமை. ஐநா அறிக்கையில் விடுதலைப்புலிகள் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் கூறி விட்டார்கள். ஐநா அறிக்கை இல்லை என்றாலும் விவரம் அறிந்தவர்கள் நிச்சயம் இதை ஏற்றுக்கொள்வார்கள். பொதுமக்கள் இழப்பிற்கு இரு தரப்பினருமே காரணம் என்று உலகம் முழுக்க தெரிந்து விட்டது இதில் சதவீதத்திலும் பாதிக்கப்பட்ட விதத்திலும் மட்டுமே வேறுபாடு. விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கு பாதுகாப்பு என்று கூறப்பட்டாலும் அவர்களால் போரில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பலர். எங்கு சென்றாலும் அடி வாங்கும் நிலையிலே ஈழத் தமிழர்கள் இருந்தனர்.
ஜெ ஆதரவு
தற்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெ அறிக்கை விட்டு வருகிறார் அதோடு தீவிரமாக நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். பலரும் வரிசை கட்டி பாராட்டி வருகிறார்கள். ஜெ செய்வது நிச்சயம் பாராட்டுக்குரியது தான் ஆனால் இவர் கலைஞர் இடத்தில் இருந்து இருந்தால் கலைஞர் முன்பு செய்ததையே தான் இவரும் செய்து இருப்பார் என்றே கருதுகிறேன். ஒருவேளை பின்னர் காங் அதிமுக கூட்டணி வந்தால் தற்போது முழங்கிக்கொண்டு இருப்பது போல இல்லாமல் அமைதியாகி விட ஏராளமான வாய்ப்புகள் உண்டு அந்த சமயத்தில் தற்போது ஜெ வை அளவுக்கதிகமாக பாராட்டிக்கொண்டு இருப்பவர்கள் நிலை மிகப்பரிதாபமாக அமையப்போகிறது.
காணொளிகள்
பல காணொளிகள் மிகவும் மோசமாக உள்ளது Channel 4 நிறுவனமே இளகிய மனம் கொண்டவர்களையும் கர்ப்பிணி பெண்களையும் இதைப் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. சிலவற்றை மட்டும் இணைத்துள்ளேன். என்னால் இதைப்போல எழுதி என் ஆதங்கத்தை வெளிப்படுத்த முடிகிறதே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிகாரமுள்ளவர்களே அமைதியாக இருக்கும் போது சாதாரண பொது சனத்தால் இதில் என்ன செய்து விட முடியும். குற்றங்களைத் தான் தடுக்க உதவவில்லை குறைந்த பட்சம் இந்த ராஜபக்சேக்கு உலக நீதி மன்றத்தில் தண்டனை வாங்கிக்கொடுத்தாலாவது சிலரின் ஆத்மா சாந்தியடையும்.
உலகிற்கு இந்தக் கொடுமைகளை எடுத்துக்கூறி நியாயம் கேட்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கும் நிலையில் இதை உலகிற்கு வெளிப்படுத்த கடும் முயற்சி எடுத்த எடுத்துக்கொண்டு இருக்கும் Channel 4 நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என்னால் முடிந்தது இது மட்டுமே.