Pages

Thursday, May 19, 2011

ஈழ சுதந்திரமும்,இந்திய சுதந்திரமும்


தலை...ப்பு தேடியதில் பெரும் தடுமாற்றம்.இந்த பதிவை வெறுமனே எழுதாமல் மே மாத தமிழ் இனப்படுகொலையின் ஆற்றாமையை நினைவு படுத்த வேண்டியாவது எழுதும் தேவைப்படுகிறது.

இந்திய இறையாண்மையென்ற பெயரில் குஜராத் பூகம்பத்திற்கு   கொட்டிக்கொடுக்க முடிந்த நம்மால் இனம்,மொழி என்ற பந்தத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுமே செய்ய இயலவில்லை.

லண்டனிருந்து ராஜபகசேவை துரத்தியடித்ததிலும், டைம்ஸ் பத்திரிகையிலிருந்து ராஜபக்சே  பெயரை நீக்கியதும்,ஐ.நா போர்க்குற்ற அறிக்கையில்  ராஜபக்சே குழுவினர் சிக்கியிருப்பதும் ராஜபக்சே குழுவினருக்கெதிரான சதுரங்க விளையாட்டில் தமிழர்கள் காய் நகர்த்திய நிலையில் இருக்கிறோம்.இப்பொழுது போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்க இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஷ் இந்தியாவின் துணை தேடி ஓடுவதும் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட இலங்கை விருப்பம் தெரிவிப்பதுமென இலங்கையின் புது நகர்வுகள் நிகழ்கின்றன

கட்சி,ஜாதி,மதம்,அகம்,புலம் என்று பிரிந்து கிடக்கும் அவல நிலையால் மட்டுமே இப்போது ஏழெட்டு கோடிக்கும் மேலான தமிழர்களின் உணர்வை 2கோடி சொச்சம் சிங்களவர்கள் தின்று கொன்று வென்று விட்டதாய் அல்ஜசிரா முதல் அமெரிக்கா வரை சென்ற மாதம் வரை ராஜபக்சே கொலை சிரிப்பும் வீங்கிய கண் தர்க்கமும் செய்து கொண்டதை அடிவயிறு எரிய   நம்மால் பார்த்து சகித்துக்கொள்ள முடிந்தது.

போரின் துவக்க கால கட்டத்தில் முள்ளிவாய்க்காலின் முள்வேலிக் கம்பி மக்களை மட்டுமே காண முடிந்தது.ஆனால் போரின் அவலங்கள் அதனை விட உக்கிரமானதென அதன் பின் வந்த சாட்சி ஆவணங்கள் இன்று மனிதம்,இதயம்,இணையம் என அங்கங்கே ஒளிந்து கொண்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியின் அதிகாரத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடந்தால் அது இந்தியாவின் தேச விடுதலையின் அடையாளமா?

அதுவே மறு உருவில ஈழமண்ணில் அப்பாவி மக்களாய் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் குண்டு வீச்சுக்களில் கொல்லப்பட்டால் தீவிரவாத முத்திரையோடு தண்டனையின் அடையாளமா? அடக்குமுறைக்கு எதிராகவும், அந்நியத்தனத்துக்கும் பகத்சிங்கும், சுபாஷ் சந்திர போஸும் போராடினால் விடுதலை வீரர்களா? பிரபாகரனும்,பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்லுக்கு வசியபபட்ட ஈழப்போராளிகள் தமது மண்ணின் சுதந்திரத்துக்காக போராடினால் தீவிரவாதமா? மனிதர்களல்ல...வரலாறு மட்டுமே மனிதர்களை சுதந்திர வீரர்களாக பதிவு செய்ய தகுதி பெற்றது.

 
ஈழ மண்ணின் சரித்திரத்தின் சில வரிகள் மட்டுமே இங்கே பதிவு செய்யப்படுகிறது.இன்னும் பதிவு தொடரென வரும்...