நீங்க தீவிரவாதியா..?
கண் துடைப்புக்காக நடத்தப்படும்
நேர்முகத்தேர்வுகளின் போது..
தன் கடமையைச் செய்ய
இலஞ்சம் கேட்கும்
அரசு அலுவலர்களைக் காணும்போதும்..
அரசுப் பணியை எதிர்பார்க்காத பட்டதாரி
சுயதொழில் தொடங்க
வங்கிக் கடன் கேட்டால்
இழிவாகப் பேசும் அதிகாரிகளைச் சந்திக்கும்போது..
அடுத்த வேளை சோற்றுக்குக் கூட
வழியில்லாதவர்கள் பலர் இருக்க..
ஏழேழு தலைமுறைக்கு
சொத்துசேர்க்கும் அரசியல்வாதிகளைக்
காணும்போது
கோயிலில் மணிக்கணக்கில் நாம் நிற்க
பணம் படைத்தவரை மட்டுமே உடனே
சந்திக்கும் கடவுள் சிலைகளைக் காணும் போது
கல்வி கடைசரக்காகும்போது
உணவுப் பொருள்களில் கலப்படத்தை உணரும் போது
ஒருவர் பொய் சொல்லி வழக்கில் வெற்றிபெறும் போது
சாலை விதிகளை மதிக்காதவர்களைக் காணும்போது
குடிசைகளையும் கோபுரங்களையும் ஒப்பிட்டுக் காணும்போது
இப்படி ஒவ்வொரு நாளும் ஓராயிரம் சூழல்களை
நாம் ஒவ்வொருவரும் சந்திக்கிறோம்.
இச்சூழல்களையெல்லாம்.....
நாம் எப்படி எதிர்கொள்கிறோம், நமக்கு எழும் கோபங்களை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் நாம் யார் என்ற மதிப்பீடே அடங்கியிருக்கிறது.
1. சராசரி மனிதரா? (தமக்குள்ளே பேசிக்கொண்டு அடுத்த வேளையைப் பார்ப்பவர்)
2. அரசியல் வாதியா? (இந்த சிக்கல்களையெல்லாம் சொல்லி இதை நான் மாற்றிக் காட்டுகிறேன் என்று ஓட்டு கேட்பவர்.)
3. சினிமாக்காரரா? (இந்த பிரச்சனைகளை மாற்றுவதாக படம் எடுத்து பணம் பார்ப்பவர்)
4. ஊடகவியலாரா? ( இந்த சமூக அவலங்களை ஆங்காங்கே சொல்லி சினிமாவும், கிரிக்கெட்டும் தான் நாடு வல்லரசாகத் தேவையெனச் சொல்பவர்)
5. ஆன்மீகவாதியா? (கடவுள் இருக்கிறார் அவர் தான் இந்த சோதனைகளைத் தருகிறார். அவரே மாற்றுவார் என தன்னைத் தேற்றிக்கொண்டு கோயில் உண்டியல்களை நிறைச் செய்பவர்)
6. தீவிரவாதியா ? (குழந்தையாகப் பிறந்து சமூக அவலங்களால் அவமதிக்கப்பட்டோ, தன்னறிவு இல்லாமலோ தீவிரவாதியாக மாறி தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் சிறைக் கம்பிகளுக்கு உள்ளேயோ!! வெளியேயோ! இருப்பவர்)
மேல்கண்ட வகைப்பாட்டில் நான் சராசரி மனிதன் என்னும் வகை சார்ந்தவன்.
நீங்க....?