அட்சய திருதி ---- வியாபர தந்திரம்
அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள் ‘’எப்போதும் குறையாதது’’. அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது.
இதற்கு உண்மையான அர்த்தம் என்ன வென்றால் இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான தருமங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான். ஆனா நாட்டுல நடக்குற கூத்து என்ன??
நேத்து நம்ம மக்கள் வாங்கி குவிச்ச தங்கம் எவ்வளவுன்னு பாருங்க !!
‘’சென்னை நகரக் கடைகளில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் ரூ.600 கோடி மதிப்புக்கு தங்கம் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டு விற்பனையைவிட 10 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.’’ (இது நகை கடையில மட்டும்).
‘’வங்கிகளில் மூலமா வாங்குன தங்கம் : அட்சய திருதியை முன்னிட்டு வங்கிகளிலும் தங்கக் காசுகள், தங்கக் கட்டிகள் விற்பனை செய்யப்பட்டன. இதற்காக பல வங்கிகளில் சிறப்பு கவுண்ட்டர்கள் செயல்பட்டன. இந்தியன் வங்கியில் மட்டும் கடந்த நான்கு நாள்களில் 284 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 130 கிலோ விற்பனை ஆனதாகவும் அந்த வங்கியின் பொது மேலாளர் மகாதேவன் தெரிவித்தார்.’’ (ஆதாரம் ; தினமணி)
யோசிச்சு பார்த்தால் மக்களின் அறியாமையே இந்த முட்டாள் தனத்திற்கு காரணம்ன்னு தோன்றும். அரசியல் வாதிகளை போலவே நகை கடைக்காரர்களும் மக்களை முட்டாளாகவே வைத்து கொள்ள விரும்புகின்றனர்.
அட்சய திருதியை சொல்லியிருக்கும் நம் மதம் புண்ணியம் ,பாவத்தை பற்றியும் சொல்லியுள்ளது. அட்சய திருதி அன்று எத்தனை கிராம் தங்கம் வாங்கினோம் என்பதை அளவுகோலாக வைத்து இறைவன் நம்மை எடை போட போவதில்லை.
சான்றோர்கள் அட்சயத் திருதியை அன்று யாகங்கள் செய்யவும்,பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும்,அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தருமங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டுசெல்லவும் கூறினார்களே தவிர தற்காலங்களில் நடைபெறுவதைப் போல தங்க வெள்ளி நகைகளை வாங்கிக் குவிக்கச் சொல்லவில்லை.
அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளில் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவது அல்ல நோக்கம்..
தங்கம் ,வைரம் போன்றவைக்கு விலை என்று ஒன்று உண்டு.ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயங்கள் என்று இவ்வுலகில் சில விஷயங்கள் இருக்கின்றன. உண்மையில் விலை மதிப்பில்லாதவை அவைகள் தாம். அவையெல்லாம் என்னவென்று யோசித்து பார்த்தால் உங்களுக்கே புரியும்.
ஆகவே……. இனி அடுத்த அட்சய திருதியில் இருந்தாவது .........வாங்காதீர்கள், கொடுங்கள். (வாங்கியே தீருவேன் என்றால் வாங்குவதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாதீர்கள் ------- கொடுங்கள்)
ஏழை மாணவர்கள் கல்வி கற்க உங்களால் முடிந்ததை கொடுங்கள். பசித்திருப்போருக்கு அன்னதானம் செய்யுங்கள்.
முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தருமங்களைச் செய்யுங்கள்..
அன்று தானம் கொடுப்பதால் ஆயுள் பெருகும்.
கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வு வளம் பெறும் என்று கூறப்படுகிறது.
அன்று செய்யும் நல்ல காரியங்களுக்கு ஒன்றுக்கு பத்தாக பலன் உண்டு. இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது எந்த விதத்தில் சரி???
என்னத்த சொல்ல………..எங்கவீட்டீலயும் அட்சய திருதியில் தங்கம் வாங்கினாங்க……….