திருமாவளவனும் விடுதலைச்சிறுத்தைகளும் (தேர்தல் ஸ்பெஷல்)
பொதுவாக ஜாதிக் கட்சிகளுக்கு எதிரான எண்ணமே நமக்கு உண்டு. ஆனாலும் தனக்கென தனித்த அரசியல் கட்சிக்கான தேவை தாழ்த்தப்பட்டோருக்கு இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ளவே வேண்டும். தமிழகத்தில் தலித் அரசியல் வலுவாகக் காலூன்றி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. ஆம், அரசு ஊழியராக இருந்த திருமாவளவன், தன்னை முழுமையாக பொதுவாழ்வில் ஈடுபத்த ஆரம்பித்தது 1990-ல்!
2001ம் ஆண்டு திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார் திருமாவளவன். ஆனால் 2004ல் திமுகவுடன் ஏற்பட்ட கசப்பால் கூட்டணியிலிருந்து விலகினார். விலகிய உடன், உதயசூரியன் சின்னத்தால் கிடைத்த எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். அதன் மூலமே தலித் அல்லாத பிறரின் கவனத்தையும் கவர்ந்தார் திருமாவளவன். திருமணமே செய்து கொள்ளாமல் பொதுவாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தன்மை மேலும் அவருக்கு பெருமை சேர்த்தது.
ஆனால் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து திருமாவின் நடவடிக்கைகள், அதுவரை அவர் சேர்த்து வைத்த பெயருக்கு சிறப்பூட்டுவதாக இல்லை என்பதே உண்மை. 1983-லிருந்தே ஈழத்தமிழர் பிரச்சினையில் ஈடுபட்டு வருபவர் திருமாவளவன். ஆனால் காங்கிரஸ் ஆதரவுடன் மாபெரும் இன அழிப்பு நடந்த போதும், காங்கிரஸ் கூட்டணியிலேயே இருந்தார் திருமா.(இன்னும் இருக்கிறார்). இதன் மூலம் பலரின் நகைப்புக்கும் ஆளானார்.
எல்லாவற்றிற்கும் சிகரமாக அமைந்தது ராஜபக்சே உடனான திருமா-வின் சந்திப்பு. திருமா போன்ற இன உணர்வாளர்கள் இலங்கை சென்ற எம்.பி. குழுவில் இடம் பெற்றிருக்கவே கூடாது. ஆனாலும் கூட்டணி நிர்ப்பந்த்தால் போனார். அவமானப்பட்டார். ராஜபக்சே-வின் கேலிக்கு அங்கேயே பதில் சொல்லாமல் இந்தியா வந்து ‘முள்வலி’ எழுதினார்.
எல்லாவற்றிற்கும் சிகரமாக அமைந்தது ராஜபக்சே உடனான திருமா-வின் சந்திப்பு. திருமா போன்ற இன உணர்வாளர்கள் இலங்கை சென்ற எம்.பி. குழுவில் இடம் பெற்றிருக்கவே கூடாது. ஆனாலும் கூட்டணி நிர்ப்பந்த்தால் போனார். அவமானப்பட்டார். ராஜபக்சே-வின் கேலிக்கு அங்கேயே பதில் சொல்லாமல் இந்தியா வந்து ‘முள்வலி’ எழுதினார்.
இடையில் எல்லோருக்கும் பெயர் மாற்றி, தமிழ் பெயர் வைக்கப் போவதாக மாநாடு கூட்டினார். ஆனால் அந்த கூட்டத்துக்கு வந்த மக்களின் ஆதரவு கிடைக்காமல் அத்திட்டம் தோல்வியைத் தழுவியது.
இன்று அரசியல் என்பது பணமுதலைகளின் கூடாரமாகவும் ரவுடிகள் அடைக்கலம் புகும் இடமாகவும் ஆகி விட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது சமீப காலமாக வரும் குற்றச்சாட்டு, கட்டப் பஞ்சாயத்து. தலித் அரசியலையே பிரதானமாகக் கொண்டு இயங்கும் இயக்கத்திற்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒரு போதும் நன்மை அளிக்காது. திருமா அத்தகைய ஆட்களை கட்சியின் பொறுப்பில் வைத்திருப்பது ஏன் என்றும் நமக்குப் புரிவதேயில்லை.
திருமாவின் சமீபத்திய போக்கில் மிகவும் எரிச்சல் ஊட்டுவது ஃப்ளக்ஸ் போர்ட் கலாச்சாரம். அவரைப் பற்றிய மிதமிஞ்சிய புகழ்ச்சி உரைகளுடன் திருமா அந்த போர்டுகளில் சிரித்துக் கொண்டே நிற்கிறார். இது ஜெயலலிதாவின் கட் அவுட் கலாச்சாரத்திலிருந்து எந்த வகையில் வேறுபடுகிறதோ புரியவில்லை. திருமாவின் இத்தகைய போக்குக்கு காரணம் தேர்தல் அரசியல் தானோ. ஒருவர் மறைந்த உடன் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்துவர். பிறகு ஒவ்வொரு வருடமும் அஞ்சலி செலுத்துவர். ஆனால் திருமாவின் தந்தை மறைவிற்கு நூறாவது நாள் அஞ்சலி(!) போர்டை சென்னையில் பார்த்து மிரண்டு போனேன்.
ஆனாலும் செல்வப்பெருந்தகை போன்றோர் திருமாவிற்கு மாற்றாக வர முயன்று தோல்வி அடைவதில் இருந்தே நாம் திருமாவின் செல்வாக்கை உணர்ந்து கொள்ளலாம். டாக்டர் ராமதாஸிற்கு எதிராக அரசியல் செய்தால் தான் கட்சி மேலும் வளரும் என்ற நிலை இருந்தும், அதற்கு உடன்படாமல் ராமதாஸுடன் இணக்கமான போக்கை திருமா மேற்கொண்டு வருவது அவரது முதிர்ச்சியையே காட்டுகிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையை தலித்கள் தலைவிதி என ஏற்று வந்தனர். இருபது ஆண்டுகளுக்கு முன் அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. தலித்கள் தாக்கப்பட்டபொது, வேகமான எதிர்த்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அந்த வன்முறை மூலமே நிலப் பிரபுத்துவக் காலம் முடிந்து விட்டதை ஆதிக்கம் செலுத்திய ஜாதிகள் உணர்ந்தன.
இப்போது தலித்களுக்கு எதிராக எங்கு வன்முறை மட்டுமல்ல சிறு அவமானம் நிகழ்ந்தாலும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களின் மூலம் தன் வலுவான எதிர்ப்பை தலித்களும் தலித்திய கட்சிகளும் பதிவு செய்கின்றனர். அதில் விடுதலைச் சிறுத்தைகள் முண்ணனியில் உள்ளனர் என்றால் மிகையில்லை. அதற்காகவாவது திருமாவளவனை அவரது அத்தனை தவறுகளுடனும் நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
இன்னும் காங்கிரஸுடன் ஒட்டிக்கொண்டு தேர்தலைச் சந்தித்தாலும், பாமகவும் இதே அணியில் இருப்பதால், இந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போதைய நிலையைத் தக்க வைக்கும்.