Pages

Sunday, March 20, 2011

வைகோ


போராட்டக் குணத்தை இழந்த போர்வாள் வைகோ (தேர்தல் ஸ்பெஷல்)

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்ற முடிவை மதிமுக எடுத்துள்ளது. நிச்சயம் இது சுயமரியாதை கொஞ்சமாவது மிச்சம் உள்ள எந்த வொரு மனிதரும் எடுக்கும் முடிவே. அந்த வகையில் இப்போதாவது வைகோ தன் சுயமரியாதையை மீட்டதில் சந்தோசமே.

ஆனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது எந்த அளவிற்கு சரியானது என்று தெரியவில்லை. நாம் ஏற்கனவே முந்தைய தேர்தல் பதிவில் சொன்ன மாதிரி, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளிலும், மதிமுகவிற்கு வாக்கு வங்கி உள்ள தொகுதிகளிலும் மதிமுக நிற்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் ஆவல்.

ஏற்கனவே தேர்தல் கமிசனின் அங்கீகாரத்தை இழந்துள்ள நிலையில், இந்தத் தேர்தலை முழுக்க புறக்கணிப்பது கட்சிக்கு நல்லதல்ல. மேலும் மதிமுகவின் நாயக்கர் சமூக ஓட்டை விஜயகாந்த்திற்கு தாரை வார்த்ததாகவே இது ஆகும். ஏற்கனவே பெரும்பாலான நாயக்கர் இன ஓட்டுக்களை விஜயகாந்த கவர்ந்துவிட்ட நிலையில், இந்த முடிவு மதிமுகவிற்கு பெரும் பாதகமாகவே முடியும்.

வேறு வழியின்றியே அதிமுகவை ஆதரிப்பதாக சீமான் போன்றோர் சொல்லி வரும் நிலையில், வைகோ இந்த நல்ல வாய்ப்பை உதறுவது நல்ல முடிவல்ல. வைகோ என்ற போர்வாள் மனதளவில் தளர்ந்து விட்டாரா? தனியே நிற்கக்கூடிய நல்ல வாய்ப்பு வந்துள்ள நிலையிலும் பின் வாங்குவது ஏன்? சீமான், நெடுமாறன் போன்ற உணர்வாளர்கள் வைகோவை இந்தத் தேர்தலில் நிற்குமாறு அறிவுறுத்துவதே சரியாக இருக்கும். அவர்கள் அம்மாவில்ம் விலை போகவில்லை என்பதற்கு அதுவே சாட்சியாகும்!

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஆரம்பத்திலிருந்தே எந்த மாற்றமும் இல்லை. அவரது அணுகுமுறையில் அகந்தை, ஆணவம், தன்னிச்சையான போக்கு ஆகியவையே திட்டவட்டமாகப் புலப்பட்டது’ என்று நேரடியாக ஜெ.வை தாக்கியதிலிருந்தே இனி சமரசத்திற்கு இடமில்லை என்றே படுகிறது.

மதிமுக தொண்டர்களை இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னாலும், நடைமுறையில் அவர்கள் வேறு யாருக்காவது ஓட்டுப் போடவே செய்வர். அதனால் மதிமுக தேர்தலில் நிற்பதன் மூலமே எஞ்சியிருக்கும் தொண்டர்களைத் தக்க வைக்க முடியும். இல்லையென்றால் கட்சி கரைந்து விடும் என்பதே யதார்த்தம்.

பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, கார்த்திக்கின் ஏதோவொரு டப்பா கட்சி எல்லாம் இந்தத் தேர்தலில் துணிந்து நிற்கும்போது வைகோ தயங்குவது ஏன்? காங்கிரஸுக்கு எதிரான ஓட்டு சிதறக்கூடாது என்பதனாலா? இனியும் ஜெ.வைப் பற்றி வைகோ கவலைப்படலாமா?

அதிமுக, திமுக வின் மேல் வெறுப்பில் இருக்கும் சில நடுநிலையாளர்கள், வைகோ என்ற தனி மனிதருக்காக மதிமுகவிற்கு ஓட்டுப் போடுவதைக் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு இருக்கும் அந்த ஆப்சனையும் வைகோ மூடுவது சரியா? நல்ல மனிதர்களும் அரசியலை விட்டு ஒதுங்கும் நிலையில், மிக்ஸியும் கிரண்டரும் தான் எங்கள் தலைவிதியா?

தனியாக நின்றால் கேவலமாகத் தோற்க வேண்டியிருக்கும் எனப் பயப்படுகிறாரா? நல்ல அரசியலுக்காக ஏங்கும் எம் போன்ற சாமானியர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தோற்றுக் கொண்டுதானே இருக்கிறோம். எங்களோடு சேர்ந்து நீங்களும் தோற்பது, உண்மையில் கௌரவமே!
மதிமுக தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு தமிழின உணர்வாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் மதிமுக என்ற கட்சி இத்தோடு அழிந்து போகும்!