Pages

Sunday, March 27, 2011

"Making a difference column"


மதுரை அண்ணாபஸ் நிலையம் அருகில் ஆறு ரூபாய் சாப்பாடு அனுபவம்



கடந்த வாரம்,"March 10, 2011 "தி ஹிந்து" மதுரை பதிப்பில், "Making a difference column" - பகுதியில் "ராமு தாத்தாவைப் பற்றி செய்தி வந்திருந்ததது. அர்த்தமாய் வாழ்க்கை வாழ்வதும், தன் வாழ்க்கையால் பிறர் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துபவர்கள் பற்றி "Making a difference column" மதுரை பதிப்பு, வாரவாரம் வெளியிடுகின்றது. அது போன்று நபர்களைத் தெரிந்திருந்தால், நாமும் எழுதி அனுப்பலாம். ராமு தாத்தாப் பற்றிய சிறப்பு என்னவென்றால், கடந்த 40 ஆண்டுகளாக, மிகவும் குறைந்த விலையில் உணவு அளிக்கின்றார். எவ்வளவு என்றால், வெறும் ஆறு ரூபாய்க்கு அளவு சாப்பாடு தருகின்றார். நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இலவசமாக கிடைக்க வேண்டிய தண்ணீரே, தற்பொழுது 14 ரூபாய், இதில் எப்படி 6 ரூபாய்க்கு சாப்பாடு? என்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. படித்தவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்ததது. அவர் கடையில் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாகி விட்டது,

முன் கடந்த வியாழனன்று அவரின கடைக்கு சாப்பிட சென்றோம். ஒரு பொரியல், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய் என அனைத்தும் சாப்பாட்டில் இருந்தது. சாப்பிட்டவுடன் வயிறும், மனதும் நிறைந்ததது. குறை சொல்ல இயலாத அளவிற்கு, கடையின் சுகாதாரம் இருந்தது.
சாப்பிட்டு முடித்தவுடன் அவருடன் உரையாடினோம். நன்றாக பேசினார். ஆறு ரூபாய்க்கு சாப்பாடு எவ்வாறு கொடுக்கின்றார் என்பதில் புரிந்து கொள்ளவே நிறைய சிரமம் இருக்கிறது நமக்கு, அவருக்கு எவ்வளவு சிரமம் இருக்கும். அவர் யாரிடமும், நன்கொடையாய் பணம் வாங்குவதில்லை. பணம் பணம், லாபம் என்றிருக்கும் உலகில், சேவை, சேவை என்று வாழ்கின்றார் ராமு தாத்தா. அவருக்கு பணத்தை விட, மனிதர்களின் பசியைப் போக்குவதே பிரதானம்.



கட்டுரையில், அவரைப் பற்றி எல்லா தகவல்களும் இருந்தன. ஆனால், எவ்வாறு இவ்வெண்ணம் வந்தது என்பது பற்றி இல்லை. நாங்கள் அவரிடம், எது உங்களை குறைந்த பணத்திற்கு சாப்பாடு கொடுக்குமாறு தூண்டியது? என்று கேட்டோம். அதற்கு அவர் நேரிடையாய் பதில் சொல்ல வில்லை. அவர் வட இந்திய மற்றும் பல இடங்களில், குறைந்த கூலிக்கு வேலை பார்த்திருக்கின்றார். அப்பொழுது கிடைத்த பணத்திற்கு, எல்லா வேலையும் சாப்பிட முடியவில்லை என்றார். அதிலிருந்து, குறைவான பணத்திற்கு சாப்பாடு கொடுத்து பசியோடு இருக்கும் மனிதரின், பசியை ஆற்றும் எண்ணம் பிறந்திருக்கும் என நாங்களாக புரிந்து கொண்டோம். அவர் சாப்பாடு போடும் அரிசியின் விலை 22 ரூபாய் . நிறைய சமயங்களில், கடன் வாங்கியே கடையை நடத்தி வந்துள்ளார். ஆறு ரூபாய் என்பது எல்லாரிடமும் வாங்குவதில்லை. மனிதற்கு தகுந்தார் போல் இரண்டு ரூபாய் சிலரிடமும், பணம் இல்லை என்றால், மனத்தையும் வாங்கி கொள்கின்றார்.

கட்டுரை வெளி வந்தததால் ஏற்பட்ட பாராட்டுகள் மற்றும் கடிதங்களால், கட்டுரை ஆசிரியர், மீண்டும் அவரைப் பற்றி "March 24, 2011" எழுதி இருந்தார். நிறைய பேர் உதவ முன் வந்துள்ளனர். "Making a difference column" பகுதியில் இரண்டு தடவை தொடர்ச்சியாய், ஒரு மனிதரைப் பற்றி வந்துள்ளது, இதுவே முதல் முறை. மூன்று அற்புதமான மனிதர்களைப் பற்றி எழுதி அனுப்பி, பின்பு அது இப்பகுதியில் வெளி வந்துள்ளது அது பற்றி பின்பு எழுதுகின்றேன்.

ஏமாற்றுவது திறமை, அதிக பணம், லாபம் சம்பாதிப்பதும் திறமை என்ற கால சூழ்நிலையில், குணம் மட்டுமே வாழ்கையை வாழும் மனிதர்.
ராமு தாத்தாவைப் பற்றி பணக்கார மனிதர்களும், வியாபார மக்களும் மற்றும் கம்பெனி ஆட்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பதாலேயோ என்னவோ மழை பெய்கின்றது என்று நினைகின்றேன். எல்லாரிடமும் அவர் போன்று மனம் இருப்பதைக் காண முடியாது. மிகவும் அற்புதமான மனத்தையும், தூய்மையான எண்ணத்தையும் கொண்டுள்ளார்.

 பள்ளி படிக்கும் வயதில் இருந்தே  மதுரையில் இருக்கின்றேன், ஆனால் அவரைப் பற்றி தெரியாது வருத்தமாய் இருந்தது. இந்த மாதத்திலாவது தெரிந்து கொண்டேன் என்று பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். அவரை சந்தித்ததும், அவர் கடையில் சாப்பிட்டதும் வாழ்வின் கணத்தில் மறக்க இயலாதது.

அவரின கடை, அண்ணா நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில், ஹோட்டல் ராஜேஸ்வரிக்கு வலது புறம் சாலையில் உள்ள மருந்து கடை அருகில் உள்ளது.

அவர் பற்றி "தி ஹிந்து" வில் வெளி வந்துள்ள லிங்குகள் கீழே:

1.http://www.hindu.com/mp/2011/03/10/stories/2011031050650200.htm
2.http://www.hindu.com/mp/2011/03/24/stories/2011032451050100.htm