லஞ்சம்
வெளியே வந்து இன்ன குழந்தை என்று அறிவித்த தாதிக்கு முன்னூறு ரூபாய் முதல் லஞ்சம்.
பெயர் சேர்த்து பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பிறப்பு அலுவலகத்தில் ஐநூறு அடுத்த லஞ்சம்.
நல்ல பள்ளியில் சேர்க்க நன்கொடை என்ற பெயரில் லஞ்சம்.
நல்ல மதிப்பெண் பெற விடைத்தாள் துரத்தி லஞ்சம்.
மதிப்பான கல்லூரியில் இடம் கிடைக்க மேனேஜ்மென்ட் என்ற பெயரிலொரு லஞ்சம்.
கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை லஞ்சம்.
நல்ல வேலை கிடைக்க, நல்ல எதிர்காலம் கிடைக்க நாளும் கடவுளுக்கு லஞ்சம்.
வீடுகட்ட வில்லங்க சான்றிதழ் பெற கார்ப்பரேஷனுக்கு லஞ்சம்.
தொல்லை இல்லாமலிருக்க கவுன்சிலருக்கு லஞ்சம்.
வாட்டர் கனெக்ஷன், மின் கனெக்ஷன் எல்லாவற்றிலும் கலெக்ஷன் லஞ்சம்.
ரேஷன் கார்ட் வாங்க லஞ்சம்...பான் கார்ட் வாங்க லஞ்சம்.
பாஸ்போர்ட் வாங்க போலீசுக்கு லஞ்சம்.
விரைந்து விசா வாங்க அங்கும் லஞ்சம்.
பெண் பார்க்க ப்ரோக்கருக்கு லஞ்சம்..விரைந்து மணமுடிக்க ரெஜிஸ்டராருக்கு லஞ்சம்.
வெளியூர் சென்று வர விரைந்த பயணச் சீட்டுறுதிக்கு அரசாங்க அதிகாரபூர்வ தத்கால் லஞ்சம்.
வருமானவரி சரி செய்ய ஆடிட்டர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம்.
நல்ல கார் வாங்க சுங்கத்துறைக்கு லஞ்சம்.
எட்டு போடாமலிருக்க எக்கச்சக்க லஞ்சம்.
ஃபேன்சி நம்பர் வாங்க. கேஸ் சீக்கிரம் கிடைக்க லைன்மேனுக்கு லஞ்சம்.
வழக்கில் மாட்டினால் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்சம்.
ஹெல்மெட் போடாவிட்டால் ஐம்பது ரூபாய் லஞ்சம்.
ஆர்சி புக் இல்லாவிட்டால் ஐநூறு ரூபாய் லஞ்சம்.
வேண்டிய ஆளைப் பிடிக்க லஞ்சம்.
வேண்டாத ஆளை அடிக்க லஞ்சம்.
இறந்த பின்னும் சீக்கிரம் எரிக்க சுடுகாட்டில் லஞ்சம்.
இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம்.
லஞ்ச வழக்கில் சிக்கினால் மந்திரிக்கு லஞ்சம்.
கொடுத்த லஞ்சங்கள் போக, வாங்கும் லஞ்சம்?
காய்கறிக்காரன் தரும் கறிவேப்பிலை லஞ்சம்.
அரசியல்வாதி தரும் இலவச லஞ்சம்.
பத்திரிகைகள் தரும் இலவச இணைப்பு லஞ்சம்.
தொலைகாட்சி தரும் புதிய படங்கள் லஞ்சம்.
வாக்களிக்க வாங்குவோம் லஞ்சம்.
லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமாம்! ஓங்கிக் குரல் எழுகிறது.