இனியும் ஒரு போர் வேண்டாம்!
ஈழ நண்பர் அனுப்பிய மெயில் ..அனுபவங்களை கவிதையாக சொல்லி இருக்கிறார் ..எனக்கு கவிதையாக தெரியவில்லை, ஈழ வாழ்வின் துயரங்கள் தான் தெரிகிறது..
அன்றொரு நாள் அன்பொழுக
அனைவருமே ஒன்றாக இருந்தோம்
ஊர் பிடிக்க, உறக்கமின்றிப்
பலர் வருகையிலோ
ஊரிழந்து, உடுத்த உடையுடனே
உணர்விழந்து அகதியானோம்,
சொந்த வீடு, உடு புடவை,
உறவுகளை தொலைத்தவராய்
கால் போன போக்கில்
நாம் நம்பினோர்
கைவிட மாட்டார்கள் எனும் நம்பிக்கையில்
ஒரு சிலரும்;
பாஸ் கிடைத்தால் ஆமியிடம்
போகலாம் பாஸ் கிடைக்காதா
எனும் அங்கலாய்ப்பில்
பலபேரும் ஓடத் தொடங்கினோம்!
ஒரு நாள் உறங்குதற்கு நேரமின்றி
ஒவ்வோர் ஊராய் இழந்தபடி
ஓடத் தொடங்கினோம்
கஞ்சியும், பருப்புக் கறியும்
சில நேரம் உணவாகக் கிடைப்பினும்
காணிகளில் கிடைக்கும்
இளநீரும், மாங்காய்களுமே
எம் பசியைப் போக்கின
ஆறுதலுக்கு யாருமின்றி
அழுது விழி நனைய
இறைவனிடம் மன்றாடினோம்,
நித்தம் நித்தம் எறிகணைகள்
நீண்ட தூரப் பல்குழல்கள்( multi barrel rocket launcher)
சுற்றி எங்கள் குடிசைகளில்
வீழும்,
வட்ட மிடும் விமானங்கள்,
வரிசையாக குண்டு வீசும்
நட்ட நடு இரவினை
பரா லைற் வெளிச்சமாக்கும்
குற்றுயிராப் பல உயிர்கள்
குருதி வெள்ளத்தில் பல உடல்கள்
செத்துவிடத் தோன்றிச்
சேடம் இழுக்கையிலோ
குடிநீரும் இல்லாது
உடல் அந்தரத்தில் தள்ளாடும்;
கால்கள் துண்டாகித் துடித்தபடி,
கைகள் இழந்து கதறியபடி
எங்கள் உறவுகள் கண்ணீர் வடிக்கையிலோ
இனியேன் இதெல்லாம்
என எண்ணத் தோன்றும்!
மருத்துவ வசதி ஏதுமின்றி
மரணத்தில் விளிம்பில்
நின்று மன்றாடி அழுதோம்,
இனியும் வாழ விடுங்கள்,
எங்களைப் போக விடுங்கள் என
இரஞ்சிக் கேட்டால்
காலால் உதை விழும்,
துவக்கால் துரத்தியும் அடி நிகழும்
உயிரைக் கையில் பிடித்து
உணர்விழந்து இருக்கையிலோ
காலையில் வானொலியில்
செய்தியறிக்கைக்கு முன்பதாக
நாடு இதை நாடாவிட்டால்
ஏது வீடு எனக்
கவிஞர் அவலத்தின்
மத்தியிலும் கவிதைப் புரட்சி செய்வார்!
உணவேதுமின்றி பட்டினியால் வாடி(ச்)
சாகும் தறுவாயில் இருந்து
சகோதரனை, தாயைத் தந்தையைத்
தங்கையினைக் குண்டு
துளைக்கியில் பார்த்திருந்து- ஓடிப்
போகும் வழியேதுமின்றி
போருக்குள் அகப்பட்ட எங்களுக்கா
போரிட மனம் வரும்?????!
வேண்டாம்!.................இனியும் ஒரு போர்